தமிழகம் முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
நரகாசுரனை கிருஷ்ண பகவான் அழித்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகளில் தீபமேற்றுவது வழக்கம் என்பதால் வீடுகள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.
முன்னதாக அதிகாலையில் எழுந்த பொதுமக்கள் எண்ணெய் தேய்த்து நீராடி இறைவனை வழிபட்டனர். புத்தாடை உடுத்தி ஒருவருக்கொருவர் இனிப்புகளை உற்சாகமாக பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஆண்டு பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிப்பதில் மக்களுக்கு சிரமம் இருந்தது. இருந்தாலும் வழக்கமான உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் காலை 6 மணிக்கு அனைத்து தெருக்களிலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடித்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
Discussion about this post