நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, பாஜக.வுக்கு எதிராக கூட்டணி அமைக்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளனர்.
பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளை, காங்கிரஸ் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த நிலையில், ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜனநாயகத்தையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டிய சூழலுக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.
ரபேல் ஊழல் மட்டுமல்ல, பாஜக ஆட்சியே ஊழலில் திளைத்துள்ளதாக தெரிவித்த ராகுல்காந்தி,பாஜகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய அனைத்து கட்சியுடனும் இணைந்து செயல்படத் தயார் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post