பனைமரத்தில் தேள்கொட்டினால் தென்னை மரத்தில் நெறி கட்டும் என்பது கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி. அப்படி ஆகி இருக்கிறது டிடிவி தினகரனின் நிலைமை. விவி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென 5 நாட்கள் மேற்கொண்டது ஊரறிந்த விஷயம். 800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்றும் வெளிநாட்டில் சுமார் இரண்டாயிரம் கோடிகளுக்கு மேல் முதலீடுகளை செய்துள்ளார் என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த பெருவெள்ளத்தில் மிதந்து வந்த கரடியாய் உண்மை ஒன்று தலைகுப்புற வந்து விழுந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது 20 ரூபாய் டோக்கன் கொடுத்து பொய்யான வாக்குறுதியை அள்ளிவீசி அகஸ்மாத்தாய் வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். அந்த தேர்தலுக்கு இறைக்கப்பட்ட கருப்பு பணம் அனைத்தும் தாதுமணல் படிந்த கரன்சி நோட்டுகளாம். அதாவது விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் தான், டிடிவி தினகரனுக்கு அந்த கருப்பு பணத்தை கத்தை கத்தையாய் அள்ளிக் கொடுத்துள்ளாராம்.
வைகுண்டராஜன் வசம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் பட்டியலில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ளதாம் டிடிவி தினகரனின் தலையெழுத்து. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது செலவுகளுக்காக கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாயை கொத்தாக அள்ளிக் கொடுத்ததை ஆவணப்படுத்தி உள்ளாராம் வைகுண்டராஜன். ஊருக்கெல்லாம் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தவரின் பெயரே, டைரிக் குறிப்பில் இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றனராம் விஷயம் அறிந்தவர்கள்.
எதற்காக இரண்டரை கோடி ரூபாய் பெற்றார், அதனை என்ன செய்தார், அதற்கான கணக்கு என்ன என்று கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒருவேளை அந்த பணம், கொல்லைப்புறமாக வந்தது உறுதியானால் இவரது சட்டமன்ற வெற்றியே கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏ என்ற பதவியும் பறிபோய் விடுவதற்கான வாய்ப்புகளே மிகவும் அதிகம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Discussion about this post