இந்தோனேசிய விமானம் விழுந்த ஜாவா கடற்பரப்பில், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் 24 பைகளில் மனித உடல் பாகங்களை மீட்டுள்ளனர். 189 பேருடன் இந்தோனேஷிய விமானம் திங்கள்கிழமை கடலில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் 132 பேரிடம் இருந்து மரபணு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணி நடைபெறும் என்றும், ஒவ்வொரு பையிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் உடல் பாகங்கள் வைக்கப்படுவதால், ஒவ்வொரு உடல் பாகத்தையும் அடையாளம் காண்பது மிகவும் சிக்கலானது எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
லையன் ஏர் விமானம் விழுந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் வேகம் மற்றும் எடை காரணமாக, அது கடற்பரப்புக்குள் விழுந்த போதே, அழுத்தம் காரணமாக விமானம் சுக்குநூறாக வெடித்துச் சிதறியிருக்கும் என்று கூறும் காவல்துறையில், அதில் இருந்தவர்களும் உடல் சிதறி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
Discussion about this post