உலக அளவில் அமைதிக்கு பாடுபடும் வகையில் இந்தியா- ஜப்பான் நாட்டு உறவுகள் பயன் தரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் சென்றார். அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேவுடன், இரு தரப்பு உறவு மற்றும், பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் முக்கிய பேச்சு நடத்தினார். பின்னர் இந்தியா, ஜப்பான் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இரு தரப்பிலும் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை இடையிலான பேச்சுகள் நடந்ததாக குறிப்பிட்டார். இந்தியா, ஜப்பான் இடையிலான உறவு வலுவாகவும், ஆழமாகவும் உள்ளது என்று கூறிய அவர், இரு நாட்டு உறவின் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் மேலும் பெருகும் என்றார்.
பின்னர் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, புல்லட் ரயில் தொடர்பான விஷயங்களை மோடியுடன் விவாதித்ததாகக் கூறினார். இந்தியா, ஜப்பான் இடையில் தொலை தொடர்பை இணைக்கும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடலோர பாதுகாப்பில் ஒத்துழைப்பு, சுகாதாரம் என இரு நாட்டுக்கும் பயனுள்ள திட்டங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் அபே தெரிவித்தார்.
Discussion about this post