ஒரு பக்கம் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருக்க, மருந்துகளை சரிவர விநியோகிக்காமல் காலாவதியாக்கி குப்பை தொட்டியில் போடும் விடியா அரசின் அலட்சியத்தை தஞ்சை அருகே குப்பைமேட்டில் கிடந்த மருந்து பாட்டில்கள் அம்பலமாக்கி உள்ளன.
அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் என்னும் டானிக் பாட்டில்கள் குப்பை மேட்டில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில்தான், தமிழ்நாடு அரசு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக விநியோகிக்கப்பட்ட அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற டானிக் பாட்டில்கள் ஆயிரம் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன.
இந்த டானிக் ஊட்டசத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தோடு இந்த மருந்து பாட்டில்கள் காலாவதியாகி உள்ளது. வழக்கமாக ஒரு மருத்துவமனையில், குறிப்பிட்ட மருந்து அதிகமாக இருப்பு இருந்தால் அதனை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அல்லது மருத்துவமனைகளுக்கு மருந்துகளை சப்ளை செய்யும், அரசு மருந்து கிடங்கு நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அவை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதோடு, மருந்துகள் காலாவதியாகி வீணாக்கப்படுவதும் குறைக்கப்படும்.
ஆனால் இது எதனையும் கவனத்தில் கொள்ளாமல் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட இருந்த மருந்து பாட்டில்கள் காலாவதியை காரணம் காட்டி கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்துக்கான டானிக் கிடைக்காமல் கூறப்படும் நிலையில் இதுபோன்று மருந்துகளை காலாவதியாகும் வரை வைத்திருந்து வீணடிப்பது என்பது முற்றிலும் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் என்றும், அதனை கண்காணிக்க வேண்டிய சுகாதாரத்துறையின் அலட்சியம் என்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post