சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானம் மற்றும் கோயில் தொடர்பான கணக்கு
வழக்குகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கேட்டிருந்தது. ஆனால் கணக்கு வழக்குகளை கொடுக்க முடியாது என்றும், கோயிலில் ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது எனவும் ஏற்கனவே தீட்சிதர்கள் தெரிவித்தது இருந்தனர். ஆனால் அதே
நேரத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கோயிலுக்கு வந்த
நகைகள் சரிபார்ப்பு பணிக்கு மட்டும் ஒத்துழைப்பு அளித்தனர்.இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் இன்று சிதம்பரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதரும் உடன் இருந்தார். அப்போது வழக்கறிஞர் நிருபர்களிடம் கூறியதாவது.
கடந்த சில மாதங்களாக கோயில் நிர்வாகம் குறித்து கோயில் எதிர்ப்பாளர்களால்
அவதூறு செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஒரு வருடமாகவே இதுபோன்ற
தகவல்கள் வருகிறது. இது இந்து சமய அறநிலையத்துறை தூண்டுதலில் நடக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையினர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு கோயில் நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பி வருகிறார்கள். கடந்த 2 ஆம் தேதி முதல் பட்டயம் பெற்ற தணிக்கையாளர்களை வைத்து எங்களது நகை மதிப்பீட்டாளர்களை வைத்து திரும்பவும் நடராஜர் கோவில் நகைகளை சரி பார்க்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நாங்கள் சொன்னது போல இந்த தணிக்கை நடந்து வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடக்கும்
தணிக்கை எக்ஸ்ட்ரேனல் ஆடிட்டரை வைத்து நடப்பதில்லை. இனிமேல் எப்போது எந்த
கடிதத்தை இந்து சமய அறநிலையத் துறை கொடுத்தாலும் அதற்கு தரப்படுவது ஒரே
பதில்தான். சபாநாயகர் கோவிலில் ஆய்வு செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அவர்களது கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் ஏன் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
இதுகுறித்து நாங்கள் விரிவாக விளக்கம் அளித்தும் இதுவரை அவர்கள் அதற்கு
பதில் அளிக்கவில்லை. இதுபற்றி தெளிவாக சட்ட ரீதியாக விளக்கம் கொடுக்கப்பட்டு
விட்டது. ஆனால் அதற்கு மறு விளக்கம் எதுவும் சட்ட ரீதியாக அவர்கள்
கொடுக்கவில்லை. நடராஜர் கோயிலில் தவறு நடந்ததாக கூறும் சம்பவத்திற்கு இதுவரை என்ன ஆதாரம் உள்ளது. ஆதாரங்கள் இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம் தவறு நடந்துள்ளது என்று பொய் பிரச்சாரம் செய்யாமல் பொது வெளியில் ஆதாரங்களை வெளியிடட்டும். 15 நாட்களுக்குள் கோயில் கணக்கில் தவறுகள் இருக்கிறது என ஆதாரத்துடன் பொது வெளியில் வெளியிட்டால் அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம். ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு ஒரே பொய்யை திரும்ப திரும்ப இந்து சமய அறநிலையத் துறையினர் கூறி வருகின்றனர். தவறு நடந்திருந்தால் அந்த ஆதாரத்தை வெளியிடட்டும் என கூறினார்.
Discussion about this post