பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா விழா கொண்டாடப்பட்டது. அப்போது ராவணன் வதம் நிகழ்ச்சியைக் காண, தண்டவாளத்திற்கு அருகில் நின்றிருந்தவர்கள் மீது, விரைவு ரயில் மோதியதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் 5 லட்சம் ரூபாயும், மத்திய அரசு சார்பில் 2 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த ரயில் விபத்திற்கு, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ரயில் தண்டவாளத்திற்கு அருகே தசரா விழாவிற்கு அனுமதி அளித்தது தவறு என அகாலி தளம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திந்த பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, ரயில் ஒலி எழுப்பாமல் வந்ததே விபத்துக்கு காரணம் என்றும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post