இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த 6 பேர் கொண்ட கும்பலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சந்தான கிருஷ்ணனின் மகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக, சரவணக்குமார் என்பவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக 21 லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்ட சரவணக்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலி நியமன ஆணைகளை தயாரித்து சந்தான கிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த சந்தான கிருஷ்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில், சரவணகுமார், ஜவஹர் பிரசாத், அன்புபிரசாத், சதீஷ்குமார், சுரேந்திரன், சுதாகர் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜவஹர் பிரசாத், ஐஏஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு, தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் பெயரில், போலி அரசாணைகளை தயாரித்து, 66 பேரிடம் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
Discussion about this post