கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா அரசுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களும், ஊடு பயிராக பயிரிடப்பட்டிருந்த உளுந்து போன்ற பயிர்களும் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உடனடியாக அதிகாரிகளை அனுப்பி, மழைநீரில் அழுகிய, பயிர்களை கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
ஏக்கருக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், மழையால் நனைந்து பாதிக்கப்பட்ட நெல்மணிகளை உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ள எதிர்க்கட்சித்தலைவர், மழையில் நனைந்த நெல்லின் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். விடியா அரசு பொறுப்பேற்ற பின், கடந்த 2021 மற்றும் 2022 பருவமழை காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதை சுட்டுக்காட்டி உள்ள அவர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான தார்ப்பாயினை இந்த விடியா அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு நிதி வர வேண்டும், காப்பீட்டுத் திட்டம் மூலம் நிதி வழங்கப்படும் என்றெல்லாம் தாமதப்படுத்தாமல், அதிமுக ஆட்சியின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக மாநில நிதியில் இருந்து நிதியை விடுவித்தது போல், இந்த விடியா அரசும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மழைக்காலங்களில் சரியாக கணக்கெடுக்காமல் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதையும், நிவாரணம் வழங்கியதில் பல்வேறு தவறுகள் நடைபெற்றதையும், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணம் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதையும், சுட்டிக்காட்டியபோதெல்லாம், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாததுபோல் இந்த விடியா அரசும், அதன் முதலமைச்சரும், அமைச்சர்களும் தனக்கு பதில் அளிப்பதையே கடமையாகக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சித்தலைவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் மழையால் மீனவர்களும், உப்பளத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு தேவையான உதவிகளை விடியா திமுக அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post