ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் தலைவரும் ஆந்திராவின் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினத்தை முன்மொழிந்தார். 2014ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமானது பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது ஹைதராபாத் இரண்டு மாநிலத்திற்கும் பொதுவான தலைநகராக இருக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பிறகு ஆந்திராவிற்கு என்று தனித் தலைநகர் வேண்டுமென்பதால் அமராவதியினை கட்டமைக்கும் சூழல் எழுந்தது. இதனை கட்டமைக்கும் பணியில் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டிருந்தார்.
பிறகு முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவிற்கு மூன்று தலைநகர் அமைக்க வேண்டும் என்றுக் கூறினார். அதன்படி ஆந்திராவில் உள்ள அமராவதியில் சட்டபேரவையும் கர்னூலில் உயர்நீதிமன்றமும் விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் அமைக்குமாறு ஆணை பிறப்பித்தார். இதனை அங்குள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து எழுந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று வரை நிலுவையில் இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் முதலீட்டாளர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கோண்டு பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என்று அறிவித்தார்.
தொழில் முதலீட்டாளர்களின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, உங்களை விசாகப்பட்டினத்திற்கு அழைக்கவே இங்கு வந்துள்ளேன். எங்கள் மாநில தலைநகராக விசாகப்பட்டினம்தான் இருக்கப் போகிறது. நானும் விசாகப்பட்டினத்திற்கு இடம் பெயரந்து விடுவேன். ஆந்திர பிரதேசத்தில் தொழில் செய்வது எளிதானது என்பதை காண உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post