ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் ஆட்சியானது நடந்து வருகிறது. அவர்கள் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து தொடர்ந்து பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது ஜவுளிக்கடையில் உள்ள பெண் பொம்மைகளின் முகத்தை மூடும்படி தாலிபான்களின் அரசு உத்தரவு இட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் முழுவதும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நடந்த பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியாகின. இத்தேர்வினை பல்லாயிரக் கணக்கான பெண்கள் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொருளாதாரம், பொறியியல், இதழியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வினை எழுதிய பெண்கள் அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டங்கள் தாலிபான்களால் ஒடுக்கப்பட்டது. இந்த விவகாரமே முடியாத நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பார்க்கக் கூடாது என்ற உத்தரவு வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. ஏனெனில் அங்கு பெண் டாக்டர்கள் உருவாகாத சூழல் உண்டாகி இருக்கிறது.
இத்தனை சம்பவங்களிற்கு பிறகு தற்போது இன்னொரு அறிவிப்பினை தாலிபான்கள் அறிவித்துள்ளனர். அங்குள்ள துணிக்கடைகளில் பார்வைக்கு வைத்திருக்கும் பெண் பொம்மைகளின் முகத்தை மூடி வைக்குமாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் அனைத்து கடைகளிலும் பெண் பொம்மைகளுக்கு முகக்கவசம் அளித்துள்ளனர் கடையின் முதலாளிகள். இதற்கு முன்பு இந்த பெண் பொம்மைகளை காட்சி வைக்கவே கூடாது என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது முகம் மூடியிருந்தால் மட்டும் போதுமானது என்று அறிவித்திருப்பது பரவாயில்லை என்று ஜவுளிக்கடை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
Discussion about this post