உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கட்சித் தொண்டர்கள் தாண்டி பொதுமக்களும் வரவேற்பதாகவும், விரைவில் தமிழக முதல்வராக எடப்பாடியார் அரியணை ஏறுவார் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லாது என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடித் தீர்ப்பை வழங்கியது.
இது அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகமெங்கும் கட்சித் தொண்டர்கள் ஆரவாரங்களில் ஈடுபட்டனர். கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிசாமியைச் சந்தித்து கட்சி உறுப்பினர்களும் தொண்டர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”அற்புதமான ஒரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்தின் பேரிலேயே எடப்பாடியார் திமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புரட்சித்தலைவி அம்மா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் போன்று எடப்பாடியாரும் தான் ஆட்சி செய்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக அறிமுகப்படுத்தினார். ஆனால் தற்சமயம் அவை முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதிமுக தொண்டர்களைத் தாண்டி பொதுமக்களும் எடப்பாடியார் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டுமென விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ”ஓபிஎஸ் என்ன தான் மேல்முறையீட்டிற்கு சென்றாலும் வெற்றிபெற முடியாது. அதிமுக தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆதரவும் எடப்பாடியாருக்கே உள்ளது. நிச்சயமாக எடப்பாடியார் தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வர் ஆவார்” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ”அதிமுக தொண்டர்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பை அதிமுகவினர் மட்டுமல்ல, பொதுமக்களே வரவேற்கின்றனர்” என்று பேசினார்.
Discussion about this post