கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்களை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கண்டறிந்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவேண்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொள்ளிடம் ஆற்றில் தற்பொழுது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் தஞ்சை மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 195 இடங்கள் கண்டறியப்பட்டு, அதில் ஐந்து இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வாழ்க்கை, குடிதாங்கி உள்ளிட்ட 5 இடங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபடவேண்டும் என்பது குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாவட்ட ஆட்சியர், ”மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதாலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் வீடுகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பு மையங்கள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம். வெள்ளம் வரும் வரை காத்திருக்காமல் தாழ்வான பகுதி மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லவேண்டும்” இவ்வாறு கூறினார்.
Discussion about this post