தமிழ்நாட்டில், விடியா அரசில் காவல்நிலைய இறப்புகள் அதிகரித்து வருவதாக கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு 25லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 8 மாதகால விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதைக் கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். குற்றவழக்குகளில் ஈடுபடுவோரை பிடிக்கும் ஒரு சில காவலர்கள் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்கதையாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தணியில் பொங்கல் தொகுப்பு புளியில், பல்லி கிடந்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த நந்தன் மீது ஜாமீனில் வெளிவர இயலாதபடி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததால், அவரது மகன் பாபு என்கிற குப்புசாமி தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தவறை சுட்டிக் காட்டியவர் மீதே காவல்துறை வழக்குப்பதிவு செய்ததால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டித்துள்ளார்.
இதேபோல் நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி உயிரிழப்பு, சென்னையில் சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் தாக்கியது என சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இதுபோன்ற நிகழ்வுகளின் எல்லை மீறல்தான் காவல் நிலைய இறப்புகளாக மாறிவிடும் சூழ்நிலையை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் குடும்பத்துக்கும், விடியா அரசின் தவறினால் இன்னுயிரை இழந்த குப்புசாமி குடும்பத்துக்கும் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
சட்டத்தின் ஆட்சியினை நிலை நிறுத்தவும், தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், உண்மைச் சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் விடியா அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post