சென்னை ராயபுரத்தில், நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், திமுகவினர் ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் கூட வைத்ததால், மேடை சரிந்து பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த பெண்ணுக்கு, திமுகவினர் முதலுதவி சிகிச்சைக்கு கூட ஏற்பாடு செய்யாதது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம் ராபின்சன் விளையாட்டு திடலில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் கூட வைத்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. மேலும், கொரோனா கட்டுப்பாடுகளை திமுகவின் நிகழ்ச்சி ஏறபாட்டாளர்கள் இம்மியும் மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டனர்.
கடும் கூட்ட நெரிசலால் ஒரு சிலருக்கு உதவிகள் வழங்கியதை புகைப்படம் எடுத்துக்கொண்டு, அமைச்சர்கள் இருவரும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றனர்.
இதையடுத்து, பொதுமக்களை வரிசையில் வரவழைத்து உதவிப்பொருட்களை வழங்காமல், பொதுவாக வழங்கியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விழா மேடை சரிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், இவற்றை பார்த்துக்கொண்டிருந்த ராயபுரம் காவல் உதவி ஆணையர் உக்கிரபாண்டியன் உக்கிரமடைந்து திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முறையான கொரோனா வழிகாட்டுதல் எதையும் பின்பற்றாமல் நிகழ்ச்சியை நடத்தியதால், பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி, நலத்திட்ட உதவி வாங்க வந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கவும் திமுகவினர் ஆர்வம் காட்டதது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Discussion about this post