திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும், அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி நிலவுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சியில் நடைபெற்று வரும் அமைப்பு தேர்தலில், தொண்டர்களுக்கு விருப்ப மனுக்களை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்த நிலையில், புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை என்று கருத்து கூறிய திமுகவினர், இன்று தங்களது ஆட்சியில் கருத்து சுதந்திரம் வழங்குகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழ்நாட்டின் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லாத காரணத்தால் தான், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் விமர்சித்தார். தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதாகம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் காய்கறிகள் விலை, மளிகை பொருட்களின் விலை, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறியதால், பொதுமக்கள் கடும் வேதனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வு ரத்து, ஏழு பேர் விடுதலை உட்பட தமிழர் நலன் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
Discussion about this post