சாந்தனு, அதுல்யா ரவி, பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா, முனிஷ்காந்த் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களோடு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘முருங்கைக்காய் சிப்ஸ்.’ ஸ்ரீஜர் இயக்கியுள்ள இந்தப் படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவிந்தர் சந்திரசேகரன் தயாரித்துள்ளார்.
படம் தொடங்கியதுமே நேராக கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குநர். புதுமணத் தம்பதிகளான சாந்தனுவுக்கும் அதுல்யா ரவிக்கும், முதலிரவின் போது தாம்பத்யம் நடக்கக் கூடாது என நாயகனின் தாத்தா பாக்யராஜ் ஒரு கோரிக்கை வைக்கிறார்.
இன்னொருபக்கம் நாயகியின் அத்தை ஊர்வசி, கண்டிப்பாக முதலிரவில் தாம்பத்யம் நடக்க வேண்டும் என அதுல்யா ரவியிடம் கூறுகிறார். பாக்யராஜ், ஊர்வசி இருவருமே இதற்காக ஆளுக்கொரு காரணங்களை முன்வைக்கின்றனர். இறுதியில் என்ன நடந்தது என முடிகிறது முருங்கைக்காய் சிப்ஸ்.
‘ஏ’ சான்றிதழோடு முதலிரவு பின்னணியில் திரைக்கதை பயணிப்பதால், பெரும்பாலான காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் வம்படியாக வந்து விழுகின்றன.
சாந்தனுவுக்கும் அதுல்யாவுக்கும் முதலிரவு நடந்தே தீர வேண்டும் என, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா, முனிஷ்காந்த், மதுமிதா ஆகியோர் பல தகிடுதத்தங்களை அரங்கேற்றுகின்றனர்.
இறுதியாக தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரனும் திரையில் தோன்றி தன் பங்கிற்கு சில சிக்ஸர்களை விளாசுகிறார். இதில் சில இடங்களில் மட்டும் ரசிகர்களுக்கு சிரிப்பு வைத்தியம் கிடைக்கின்றது, அதிகமான காட்சிகள் ஏற்கனவே பார்த்துப் பழகிய உணர்வைத் தருகின்றன.
திரைக்கதையில் நீளத்தை வைத்து பார்க்கும் போது, கதை ஒரேநாளில் நடப்பதாக நம்பமுடியவில்லை. குறைந்தபட்சம் திருமணமான முதல் மூன்று நாட்கள் அல்லது இதே கதைக்களத்தை இன்னும் கொஞ்சம் புதுமையாக யோசித்திருந்தால், நிச்சயம் படம் நல்ல அனுபவத்தை தந்திருக்கும். கொஞ்சம் பொறுமையாக படம் பார்த்தால், ஓரளவு ஜாலியாக திரையரங்குகளை விட்டு வெளியே வரலாம்.
முருங்கைக்காய் சிப்ஸ் – முதலிரவு கலாட்டா.
– அப்துல் ரஹ்மான்
Discussion about this post