நிஷாந்த் இயக்கத்தில் வசந்த் செல்வம், தினேஷ் மணி, ஹக்கிம், விஜய் ராம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசீல பிரியாணி’. சுயாதீனப் படங்களுக்கான இலக்கணங்களுடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பார்த்து பார்த்து பழகிய தமிழ் சினிமாக்களுக்கு இடையில், இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமான முயற்சின்னு கண்டிப்பா சொல்லலாம். குறும்படத்திற்கான கதையை வைத்துக்கொண்டு புதிய முயற்சியுடனான திரைக்கதையையும், அதனை படமாக்கிய விதமும் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது.
விஜய் சேதுபதியின் பின்னணிக் குரலில் படத்தின் கதையை விவரிக்கும் இயக்குநர், தொடர்ந்து காட்சிகளாக திரைக்கதையை நகர்த்துகிறார்.
தந்தையை கொன்றவனை பழிவாங்க வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மூன்று சகோதரர்கள் பெரிய பாண்டி, இள பாண்டி, சிக்கு பாண்டி ஆகியோர் முரண்பாடுகளுடன் பயணிக்கின்றனர். இவர்கள் கொலை செய்யச் செல்லும் அந்த மனிதர், கேரளாவில் உள்ள கிராமத்தில் முக்கியமான நபர்.
பாண்டி பிரதர்ஸ் அங்கு சென்றதும் தான் தெரிகிறது, பெரிய மனிதரின் மகன் கொடூரமான சைக்கோத்தனமானவன் என்பதும், கொலை செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதும். இதனையும் மீறி அவர்களது திட்டம் வெற்றிப் பெற்றதா? இறுதியில் மூன்று சகோதரர்களும் என்ன ஆனார்கள் இதுதான் கடைசீல பிரியாணி.
சில காட்சிகளைத் தவிர படம் முழுக்க க்ரைம் திரில்லரைப் போன்று விறுவிறுவென நகர்கிறது.
காட்சிகளையும் கதையின் போக்கையும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாதளவிற்கு மொத்த அணியும் அபாரமான உழைப்பை கொடுத்திருக்கின்றனர்.
சகோதர்களாக வரும் வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் மூவரும் அவர்களது பாத்திரங்களுடன் சரியாக பொருந்தியுள்ளனர். இவர்களைத் தாண்டி மோகன்லாலாக வரும் ஹக்கிம் ஷா சைக்கோத்தனமான பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.
சிறுவயதில் தான் மனதளவில் பாதிக்கப்பட்ட சம்பவங்களை கூறுவதில் இருந்து, தனது சைக்கோத்தனத்தை உக்கிரமாக வெளிப்படுத்துவது வரையிலும் அட்டகாசம்.
இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தும் லாரி டிரைவர், அவரது மகன் பாத்திரம் படத்திற்கு திருப்புமுனையாக அமைகிறது.
“தான் திருடிய பர்சை சிக்கு பாண்டியிடம் கொடுத்து, அதிலிருக்கும் குடும்ப போட்டோவை காட்டி லாரி டிரைவர் பேசும் வசனம் தான்” இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சொல்ல நினைப்பது என புரிந்துக்கொள்ளலாம்.
இங்கு எல்லாமே நொடிப் பொழுதுதான் என்பதை பெரிய பாண்டி, இள பாண்டி, லாரி டிரைவர், அவரது மகன், மோகன்லால் பாத்திரங்களுக்கு நடக்கும் சம்பவங்கள் வழியே இயக்குநர் விவரித்துள்ளார்.
படத்தின் இறுதிக் காட்சியில் விஜய் சேதுபதியையும் திரையில் வர வைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
கதை, திரைக்கதை, பாத்திரங்கள் இவையெல்லாவற்றையும் கடந்து இந்தப் படத்தில் ரொம்பவே கவனிக்கப்பட வேண்டியது ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒலிக்கலவை (சவுண்டிங்). கேரள வனத்தின் கொள்ளையழகையும் அசீம் முஹம்மது, ஹெஸ்டின் ஜோஸ் சோசப் இருவரும் தங்களது கேமராக்களில் மொத்தமாக அள்ளி வந்திருக்கின்றனர்.
வினோத் தணிகாசலத்தின் பின்னணி இசையும், பாடல்களில் ஜோத் பவுல், நீல் சபாஸ்டின் ஆகியோரின் இசையும் ரசிகர்களுக்கான வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக காட்சிக்கு காட்சி பல புதுமைகளை விருந்து படைத்துள்ளது ‘கடைசீல பிரியாணி’ குழு.
திரைக்கதையின் வேகத்தில் இயல்பான சில குறைபாடுகள் இருந்தாலும் வசனங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சுயாதீனப் படம் என்பதற்காக கேட்பவர்களை நெளிய வைக்கும் வசனங்கள் தேவையில்லாமல் இடம்பெறுவது முகம் சுழிக்க வைக்கின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் புதிய அனுபவத்துடன் திரையரங்குகளில் பார்ப்பதற்கு தரமான படம் ‘கடைசீல பிரியாணி’.
– அப்துல் ரஹ்மான்
Discussion about this post