திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்கள், அவரது உறவினர்களின் வீடுகளிலும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில், திமுக அரசு தனது பழிவாங்கும் நடவடிக்கையை மீண்டும் பகிரங்கப்படுத்தி, தற்காலிக மகிழ்ச்சியை தேடி இருப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா திமுகவின் பொன்விழாவையொட்டி நடைபெற்று வரும் உற்சாக விழாக்களை கண்டு, திமுகவால் மனம் பொறுக்க முடியவில்லை என்றும், காவல்துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம் அண்ணா திமுக என்றும், திமுகவின் முயற்சிகளால் ஓய்ந்து சாயப் போவது இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கழக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும் எதிர்காலத்தில் அண்ணா திமுக அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post