மலையாள முன்னணி நடிகர் நெடுமுடி வேணு, அவரது 73வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்,
நெடுமுடி வேணுவின் 43 ஆண்டுகால கலையுலக பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
1948ம் ஆண்டு கேரள மாநிலம் நெடுமுடி என்ற பகுதியில் பிறந்த கேசவன் வேணுகோபால் துவக்கத்தில் பத்திரிகையில் பணியாற்றினார்.
அப்படியே மேடை நாடகங்கள் வழியாக சினிமாவில் நெடுமுடி வேணு என்ற பெயரில் அடியெடுத்து வைத்தார்.
1978ம் ஆண்டு முதல் படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், தனது குணசித்திர நடிப்பால் ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமானார்.
இயல்பான நடிப்பு, யதார்த்தமான உடல்மொழி, தனித்துவமான வசன உச்சரிப்பு என மலையாள சினிமா உலகில் தனக்கென தனி வழிதடத்தை அமைத்துக்கொண்ட அவர், தனது பாத்திரங்களை உயிர்ப்புடன் திரையில் வெளிப்படுத்துவார்.
1990ல் வெளியான ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்திற்காக முதல் தேசிய விருதை வென்ற அவர், மார்க்கம், மினுக்கு ஆகிய படங்களுக்காக என, மொத்தம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
இவைகளில் ‘மினுக்கு’, படத்தில் நடிக்காமல் குரல் வர்ணனைக்காக விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருதுகள் உட்பட 6 முறை கேரள மாநில விருதுகள், 3 பிலிம்ஃபேர் விருதுகள் என பல விருதுகள், நெடுமுடி வேணுவின் நடிப்பிற்கு அங்கீகாரமாக கிடைத்துள்ளன.
மலையாளத்தில் கள்ளன் பவித்ரன், போக்கிரி ராஜா, செல்லுலாய்ட், மெமரீஸ், ஜோசப் உட்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல், தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் இந்தியன், விக்ரமுடன் அந்நியன், பொய் செல்லப் போறோம், சர்வம் தாளமயம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்திய அளவில் மிகச் சிறந்த குணசித்திர நடிகர்களில் ஒருவராக நெடுமுடி வேணு அறியப்படுகிறார்.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டு வந்தார்.
இந்நிலையில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நெடுமுடி வேணு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post