தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்ற காலம் கடத்துவது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வாலாஜாபாத் வந்த அவருக்கு, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருடன் அப்பகுதி மக்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக நிர்வாகிகளும் வேட்பாளர்களும் பங்கேற்று, உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து ஆலோசித்தனர். அப்போது பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொய் வாக்குறுதிகள் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய கட்சி, திமுக கட்சி என விமர்சித்தார்.
அதிமுக ஆட்சியில், சட்ட ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக கூறிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக விமர்சித்தார். தினமும் அரங்கேறும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்த பிறகு முதல் கையெழுத்து, நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பை வெளியிட்ட திமுக, மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார். எந்த கட்சியினரும் கோரிக்கை வைக்காத நிலையில் 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தி ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை அதிமுக அரசு நிறைவேற்றியதாகவும் அவர் கூறினார். இப்படி ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் ஒரு பேச்சு என பேசி வரும் திமுகவை மக்கள் இனி நம்ப மாட்டார்கள் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Discussion about this post