தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பெரும்பாலான பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும், இதன்காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பரவும் நிலை உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்தநிலையில், தஞ்சை மாவட்டம் பூதலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு பயிலும் பிற மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்றுவரும் 9 மாணவிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஆளான மாணவர்கள் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர்கள் முகக்கவசம் அணிவது, பாதுகாப்பு இடைவெளி ஆகியவை பின்பற்றப்படுவதை ஆசிரியர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் நடந்துகொள்வதே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Discussion about this post