தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தியாகி இமானுவேல் சேகரனின் 64வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதித்த மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜலெட்சுமி மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி நகர் முழுவதும் 90 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 30 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி, சிவகங்கை உள்பட காளையார்கோவில், மானாமதுரை, திருபுவனம் ஆகிய 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று நள்ளிரவு வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்தின் வழித்தடங்களும் மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post