விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக, விநாயகர் சிலை ஊர்வலத்தை அனுமதிக்க இயலாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கோ, சிலைகளை வைத்து விழா கொண்டாடவோ அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்ட புளியந்தோப்பு காவல் மாவட்டம் மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்திக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று மாணிக்க விநாயகருக்கு 30 கிலோ, உச்சிபிள்ளையாருக்கு 30 கிலோ என்று 60 கிலோ கொலுக்கட்டை படைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், குறைந்த அளவிலான கொலுக்கட்டை படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. புலியகுளத்தில் அமைந்துள்ள முந்தி விநாயகர் கோயிலில், மிகப்பெரிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்ட 19 அடி உயர விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
உலகப்புகழ்பெற்ற மீனாட்சியம்மன் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை பக்தர்கள் வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் வெல்லம், தேங்காய், கடலை, எள், ஏலக்காய், நெய் கலந்து கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நெய் வேத்தியம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வீட்டிலிருந்தே நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, பிள்ளையார்பட்டியில், விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்கத்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், அதனை பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மணக்குள விநாயகர் கோவிலில் காலை 5.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படாது எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post