சபரிமலையில் வரும் 18-ம் தேதி நடை திறக்கப்பட உள்ள நிலையில், இன்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, கேரளாவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். போராட்டங்கள் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், மறுபுறம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சபரிமலைக்கு கட்டாயம் செல்வோம் என பெண்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், எதிர்ப்பை மீறி சபரிமலை வரும் பெண்கள் தடுத்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் பல்வேறு இந்து அமைப்பினர் எச்சரித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழலில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக 18-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. 22-ம் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.
இதையடுத்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. அதில் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post