ஆப்கானிஸ்தானில் இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில், குண்டிவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தாலிபன் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்க, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றன.
இதற்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் காபுல் விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோராசன் பிரிவு பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் 13 அமெரிக்கர்கள் உட்பட 175க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடி அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் காபுல் அருகே உள்ள நங்கர்ஹான் மாகாணத்தில் ட்ரோன் விமானங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் காபுல் விமான நிலைய இரட்டை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காபுல் விமான நிலையத்தில் மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அங்கு வாயிலில் காத்திருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.
Discussion about this post