புதிய வாகன பதிவில், பாரத் சீரிஸ் என்ற பதிவு எண் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 47-ன் கீழ், ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை, வேறொரு மாநிலத்தில் உபயோகப்படுத்த, அம்மாநில மாநிலத்திற்கு பதிவை மாற்றுவது அவசியம். வாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் 12 மாதங்களுக்கு மேல் வாகனத்தை வைத்திருக்க முடியாது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 12 மாதங்களுக்குள் புதிய மாநில பதிவு அதிகாரத்துடனான பதிவை செய்ய வேண்டும். இதனால் பணி மாறுதல் பெற்று செல்லும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். வாகனங்களை தடையின்றி மாற்றுவதற்கு வசதியாக, சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், புதிய வாகனங்களுக்கான பாரத் சீரிஸ் என்ற புதிய பதிவு அடையாளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பாரத் சீரிஸ் பதிவு பெற்ற வாகனம், வேறொரு மாநிலத்தில் பயன்படுத்த, அம்மாநிலத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இந்த நடைமுறையை முதற்கட்டமாக மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பாதுகாப்புதுறையினருக்கு மட்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post