முந்தைய அதிமுக ஆட்சியில், பருவகாலம் தொடங்கியதுமே, சிறப்பான முன்னெச்சரிக்கை காரணமாக மழை பெய்த சுவடே தெரியாத அளவுக்கு மீட்புப் பணிகள் இருந்தன. தற்போது, ஒருநாளில் 2 மணி நேரம் மட்டுமே பெய்த மழைக்கு சென்னை மாநகர் மழைநீரால் தத்தளிக்கிறது. திமுக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு இதுவே சான்று.
முந்தைய அதிமுக ஆட்சியில், பருவகாலம் தொடங்கும் முன்னரே, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று, பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னையில் உள்ள 15 மண்டல உயரதிகாரிகளை அழைத்து தண்ணீர் தேங்கும் இடங்கள் மற்றும் தேங்கிய மழைநீரை அகற்ற எதுபோன்ற உபகரணங்கள் தேவை என்பது குறித்து, ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சென்னையில் மட்டும் 3 ஆயிரம் இடங்களில் தண்ணீர் தேங்கியது கண்டறியப்பட்டு 200 இடங்களாகக் குறைக்கப்பட்டு, அவற்றையும், சீர்செய்யும் பணியும் நடைபெற்று வந்தன.
வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் எச்சரிக்கையை தொடர்ந்து, மழை தேங்கும் இடங்கள், மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் கூடுதல் அதிகாரிகளை முன்கூட்டியே நியமித்து, தேவையான நவீன உபகரணங்களை கொடுத்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்காரணமாக, முந்தைய அதிமுக ஆட்சியில், மழை பெய்த சிறிது நேரத்திலேயே தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீர், சுவடுகளே தெரியாத அளவுக்கு வெளியேற்றப்படும். அடைமழை பெய்ததாலும் பலத்த காற்று வீசினாலும், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் எவ்வித சிரமமுமின்றி சென்றுவரும் நிலைமை இருந்தது.
மழைக்காலங்களில், பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, ஏற்படக்கூடிய பாதிப்புகள், என்ன என்பது குறித்து கண்காணிக்கப்பட்டன. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் ஒருநாள் மழைக்கே சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் அவதிக்கு ஆளாகும் நிலை உள்ளது.
Discussion about this post