5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு கானல் நீரா என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று இதுதான் திமுகவின் வாடிக்கை எனவும் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, ஏச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா?… எண்ணிப் பாருங்க… ஐயா எண்ணிப் பாருங்க…. என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏமாற ஆள் இருக்கும் வரை ஏமாற்றலாம் என்ற கொள்கை அடிப்படையில் விடியா அரசு செயல்படுவதாகவும், திமுக ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகளிலேயே மக்கள் விழிபிதுங்கி நிற்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது பசப்பு வார்த்தைகளைப் பொழிவதாகவும், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்வோம் என கூறி, வாக்குகளைப் பெற்றுவிட்டு தற்போது அதனை முழுவதுமாக மறந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக பல்வேறு நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக செய்திகள் வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கும் கிடைக்காத வகையில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வருவதாக கூறியுள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தாலும் நிபந்தனைகளால் பலரால் கடன் தள்ளுபடி சலுகை பெறமுடியாது என கூறியுள்ளார்.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…” என்ற புரட்சித் தலைவர் பாடலுக்கேற்ப திமுக அரசை மக்கள் குறைகூறத் தொடங்கியுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் அளவு எவ்வளவு என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், திமுக அளித்த 505-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற எண்ணம் இல்லாமல், நிதியமைச்சரை வைத்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
அதுவும், அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் தொகுப்பாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு எனக் கூறிக்கொள்ளும் திமுக, அவர்களது பணப்பலன்களில் கைவைப்பதும், வாக்குறுதிகளில் ஒன்றிரண்டை நிறைவேற்றுவதாகக் கூறி, புதிய புதிய நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டுள்ளதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகிறது எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களை இனியும் ஏமாற்றாமல், அவர்கள் விழிப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு திமுக அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களையும், 5 சவரன் வரை நகைக் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும் என திமுக அரசிடம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post