மாவட்ட செயலாளர் முதல் அவைத் தலைவர் வரை அதிமுகவில் பல பொறுப்புகளில் இருந்த பெருமை மதுசூதனனுக்கு உண்டு.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகவும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர் மதுசூதனன்…
1940ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி வடசென்னையின் வண்ணாரப்பேட்டையில் பிறந்த மதுசூதனன், சிறுவயதில் பென்சில் ஆலையில் பணிபுரிந்தார்.
பல வேலைகளில் ஈடுபட்டதால் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் சரளமாக பேசும் ஆற்றல் இவருக்கு உண்டு.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான மதுசூதனன், 1960களில் எம்.ஜி.ஆர் மன்றத்தை துவக்கினார்.
1972ல் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி அதிமுகவை துவக்கிய போது, ரசிகர்களாக இருந்து தொண்டர்களாக மாறிய கோடிக்கணக்கானோரில் மதுசூதனனும் ஒருவர்.
பின்னர் வடசென்னை பகுதியில் அதிமுகவை வேரூன்ற வைத்ததில் மதுசூதனன் பெரும் பங்காற்றினார்.
சிறப்பான களப்பணியின் மூலம் எம்ஜிஆரின் அன்பை பெற்ற மதுசூதனன், 1980ல் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவரை எம்.எல்.சி.யாகவும் புரட்சி தலைவர் நியமித்தார்.
புரட்சித் தலைவர் மறைவுக்கு பின்னர் புரட்சி தலைவி ஜெயலலிதா பக்கம் நின்றவர் மதுசூதனன். பின்னர் புரட்சி தலைவி ஜெயலலிதா தலைமையில் கழகம் ஒன்றிணைந்த பின்னர்,
1991ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மதுசூதனன் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
2000ஆம் ஆண்டில், கட்சியின் அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர் மன்றச் செயலாளராக மதுசூதனன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அதிமுகவின் அவைத்தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.
புரட்சி தலைவியின் மறைவுக்கு பின்னும் கட்சியின் அவைத்தலைவராக நீடித்த மதுசூதனன், வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 81 வயதில் மதுசூதனன் காலமானார்…
இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராகவும், தொகுதியை நன்கு அறிந்த மண்ணின் மகனாகவும் வலம் வந்து, காலம் சென்ற அவைத்தலைவர் மதுசூதனனுக்கு, நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது…
Discussion about this post