தமிழக மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து, இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் உரிமைக் குரல் முழக்க போராட்டம் நடைபெறவுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது உறுதி, உறுதி, உறுதியோ உறுதி என ஒவ்வொரு கூட்டத்திலும், திமுக முழங்கியதை கேட்டு வாக்காளர்கள் நம்பி வாக்களித்துதார்கள் என்றும்
சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்திருக்கும் திமுக, இப்போது நீட் தேர்வுக்கு தயாராகும்படி, மாணவர்களுக்கு உத்தரவிட்டு, மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து, வருமானம் சுருங்கி போய் அல்லல்படும் மக்களின் துயரத்தை போக்க திமுக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாகவும் வாக்குறுதியளித்த திமுக இதுவரை தனது வாக்குறுதியை பற்றி வாய் திறக்காமல் இருப்பதாக விமர்சித்துள்ளனர்.
தமிழ்நாடு எங்கும் மின்வெட்டு நாள்தோறும் நடைபெறும் நிலையில், “அணில் ஓடுவதால் மின்சாரம் தடைபடுகிறது” என்று கூச்சமின்றி திமுக பேசுவதாக சாடியுள்ளனர்.
விவசாயிகளுக்கு விதை, வித்துகள், உரம் போன்ற இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், தடையில்லா மின்சாரம் வழங்கிடவும்,
இதுவரை எதையும் செய்திராத திமுக அரசின் மெத்தனப் போக்கும், அலட்சியமும் பெரும் பொருளாதார சீர்குலைவிலும், கிராமப்புற ஏழ்மையிலும் கொண்டுபோய் விடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
விழிப்புடனும், முனைப்புடனும் செயல்பட்டு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள் கட்டுப்படுவதை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுகவினர் மீது பொய் வழக்கும் போடும் மலிவான அரசியல் ஆயுதத்தை திமுக அரசு கையில் எடுத்திருப்பதாக சாடியுள்ளனர்.
அதிமுகவை அழித்துவிடலாம் என்று கனவு கண்டால், அது பகல் கனவாகவே முடியும் என்றும், இதுபோன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப்பெற்ற இயக்கம் அதிமுக என்றும் தெரிவித்துள்ளனர்.
திமுக அரசின் மெத்தனப் போக்கை களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்க செய்யவும், தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் உரிமைக் குரல் முழக்க போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சிகளில், தங்கள் வீடுகளின் முன்னே, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பதாகைகள் ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை குரல் எழுப்பி, தமிழ்நாட்டு மக்களின் உரிமை குரல்களாய் ஒலிக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post