கன்னட சினிமா மூலம் நடிகையாக அறிமுகமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி தனது 76 வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். கலைத்துறையில் சுமார் 50 ஆண்டுகள் காலம் பயணித்த அவரது சாதனைகளை தற்போது காணலாம்.
1945ம் ஆண்டு கமலகுமாரி என்ற இயற்பெயரோடு கர்நாடகத்தில் பிறந்த ஜெயந்தி, 1963ம் ஆண்டு ஒய்.ஆர்.ஸ்வாமி இயக்கிய ‘ஜெனு குடு’ என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து நாகேஸ்வர ராவ், நாயக் ஆகியோர் இணைந்து இயக்கிய ‘ஸ்ரீ ராமஜெனயா யுதா’ ((Sri Ramanjaneya Yuddha))-வில் கன்னட சூப்பர்
ஸ்டார் ராஜ்குமாருடன் நடித்திருந்தார். இந்தப் படம் உட்பட மொத்தம் 45 படங்களில் ராஜ்குமாருடன் ஜெயந்தி நாயகியாக நடித்திருந்தார்.
கன்னடம், தமிழ், மலையாள மொழி படங்கள் என தனது பயணத்தை தொடர்ந்த ஜெயந்தி, நடிகைகளுக்கென இருந்த சில மரபுகளை உடைத்தெறிந்தவர்.
கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை கலங்கடித்த முதல் தென்னிந்திய நடிகை என்று ஜெயந்தியை குறிப்பிடலாம். 1960, 70களில் நவநாகரீக உடைகள், நீச்சல் உடை போன்றவைகளுடன் திரையில் மிக துணிச்சலாக தோன்றியவர்.
கவர்ச்சியால் மட்டும் திரைத்துறையில் நிலைத்திருக்காமல், தனித்துவமான உடல்மொழியால் நட்சத்திர நாயகியாகவும் ஜொலித்தவர் ஜெயந்தி.
தமிழில் எதிர் நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம் உள்ளிட்ட படங்களில், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மிக விருப்பமான நடிகையாக காணப்பட்ட ஜெயந்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பழம்பெரும் முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
ஜெயந்தி என்றதுமே ரசிகர்களின் நினைவில் வருவது, ‘காதோடு தான் நான் பாடுவேன்’ என்ற பாடலை கூறலாம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் படகோட்டி, முகராசி, உள்ளிட்ட படங்களில் ஜெயந்தி நடித்துள்ளார்.
ஜெமினி கணேசனுடன் கண்ணா நலமா, வெள்ளி விழா, புன்னகை, ஆகிய படங்களில் இணைந்து நடித்தார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயந்தி, தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஜெயந்தி, இன்று(26.07.2021) காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நியூஸ் ஜெ தொலைக்காட்சி தனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.
Discussion about this post