தற்போது உள்ள அரசு ஆவணங்களில், ராமநாதபுரம் என்று குறிப்பிடப்படும் ஊர், 500 ஆண்டுகளுக்கு முன் முகவை என்றும் அழைக்கபட்டுள்ளது. ராமநாதபுரம் முகவை என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன..? தெரிந்த கொள்ளலாம்….
தண்ணியில்லாக்காடு, விவசாயம் விளையாத பூமி, வறட்சி மாவட்டம் என பொதுவாக அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம், ஒரு காலத்தில் நெற் களஞ்சியமாக இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம், அதுதான் வரலாறு. ராமாநாதபுரத்திற்கு முகவை என்ற இன்னொரு பெயரும் உண்டு.
முகவை என்ற சொல், சங்க இலக்கியங்களில் அள்ளுதல், நெற்பொலி உள்ளிட்ட பல பொருள்களில் குறிப்பிடப்படுகிறது. மேலும், சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் முகவைப்பாட்டு, நெல் கதிரடிக்கும் இடத்தில் பாடப்படும் பாட்டாகும்.
ராமநாதபுரத்தைச் சுற்றிலும் நெல்லை நினைவுபடுத்தும் சூரன் கோட்டை, சக்கரக் கோட்டை, மேலக்கோட்டை உள்ளிட்ட 72 ஊர்கள் இன்றும் சாட்சியாய் உள்ளன. தற்போதைய ராமநாதபுரம் நகரம், முற்காலத்தில், நெல் கதிரடிக்கும் மையமாக விளங்கியதால், முகவை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ராஜா கிழவன் சேதுபதி காலத்தில் இப்பகுதியில் தோண்டப்பட்ட ஊருணி ”முகவை ஊருணி” என்றே அழைக்கப்படுகிறது. கி.பி.1711-ம் ஆண்டு அவர் வழங்கிய செப்பேட்டில், ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் இருக்குமிடமும் ”முகவை” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி.1607-ல், திருமலை உடையான் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில், ராமநாதபுரம் எனும் ஊர் முதன் முதலில் குறிப்பிடப்படுகிறது. ராமநாதபுரம் நகரம் உருவாவதற்கு முன், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில், களத்தாவூர், அச்சுந்தன்வயல், சூரங்கோட்டை ஆகிய ஊர்கள் சிறப்புற்று இருந்துள்ளன. நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதியாக இருந்ததாலேயே, ராமநாதபுரத்திற்கு முகவை என்ற பெயர் வழங்கப்பட்டதாக, தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறுகிறார்.
தண்ணியில்லாக்காடு என அழைக்கப்படும் ராமநாதபுரம், முற்காலத்தில் நெற் களஞ்சியமாக விளங்கியது என்னும் வரலாற்று உண்மை, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post