மருத்துவ படிப்புகளில் தமிழக அரசின் சார்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக் வழங்கப்படும் இடங்களுக்கு, 69 சதவீத இடஒதுக்கீட்டை 2021-22ம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில்,இளங்கலை படிப்பில் ( எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) 15% இடங்களும், முதுகலை படிப்பிற்கு ( எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்பு) 50% இடங்களளும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது.
இவ்வாறு மத்திய அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில், தமிழக அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி கடந்தாண்டு தமிழக அரசு, அதிமுக, பாமக, திராவிடர் கழகம், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகாக சார்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-22ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பரிந்துரை அளித்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், 2021-22ம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத்தரவு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதியளித்தும், அதை அமல்படுத்தவில்லை எனவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் வாதிடப்பட்டது
மத்திய அரசுத்தரப்பில், இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாகவும் எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-22ம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைபாட்டை மத்திய அரசு, அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Discussion about this post