தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசு இப்போதாவது மாணவச் செல்வங்களை ஏமாற்றுவதை நிறுத்துமா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது பேசும்போதுகூட, நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா என்று தான் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் நேரடியாக எந்த பதிலும் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.
2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் 2016ம் ஆண்டு வரை புரட்சித் தலைவி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறி மத்திய அரசுக்கு அனுப்பியதும், ஆனால் மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ஆராய மட்டுமே நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு, நீட் தேர்வை ரத்து செய்ய அமைக்கப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர்நீதிமன்றம் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நிலையில், திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டதைப்போன்று, ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும் குறைகூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும், அதற்கான வழி எங்களுக்கு தெரியும் என்றும் வாய்வீரம் காட்டிய ஸ்டாலின், தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக தன் மீது பழி சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் நாகரிகம் இன்றி முதலமைச்சர் பதவிக்கான தகுதியை உணராமல் அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் நஞ்சை கக்கியிருப்பதாகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முதல், தமிழகத்தை பாதிக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும், ஒவ்வொரு அடியையும் மிகவும் எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து அதிமுக செய்லபட்டதாகக் கூறிய அவர்,
இன்றைய திமுக ஆட்சியாளர்களைப் போல் எந்த வாக்குறுதியை வேண்டுமென்றாலும் அள்ளி வீசலாம், மக்களை ஏமாற்றலாம், அதிகாரம் கைக்கு வந்தபின் எப்படி வேண்டுமானாலும் மாற்றி பேசலாம், 5 ஆண்டுகளுக்கு நம்மை யாரும், எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்ற மமதை குணம் கொண்டுள்ளதுபோல் நாங்கள் செயல்படுவதில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி நீட் ஒழிந்து விடும் என்று தேர்விற்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், நீட் தேர்வு தேதி அறிவிப்பு தலையில் இடியை போல் இறங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவே, நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற அரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய எந்தவிதமான முறையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், தேர்தலுக்காக வாய்ஜாலம் காட்டிவிட்டோமே என்ற நிலையில், தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என பிதற்றிக்கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில், நமது அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
2019ல் மருத்துவம் பயில அரசு பள்ளிகளில் பயின்ற 6 மாணவர்கள் மட்டுமே தேர்வான நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாகி, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியுதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்துள்ளார்.
இதன் மூலம் 2020ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் படித்த 435 மாணவர்கள் மருத்துவ படிக்கும் வாய்ப்பை பெற்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், 17 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் அவர்களின் வழிவந்த நாங்களும் நீதிக்கு தலைவணங்கக்கூடியவர்கள், சட்டத்தை மதிப்பவர்கள், எத்தகைய சூழ்நிலை வந்தாலும் மக்கள் நலனுக்காக சட்டப்போராட்டம் நடத்தியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய திமுக ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post