சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் எஸ்.பி.ஐ டெபாசிட் ஏடிஎம்களை குறிவைத்து ஹரியானா கும்பல் கைவரிசை காட்டி 1 கோடி ரூபாய் வரை கொள்ளை அடித்து சென்றனர். இது தொடர்பாக சென்னை தனிப்படை போலீசார் ஹரியானாவிற்கு விரைந்து கொள்ளையில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்தர், நஜீப் ஹுசைன் மற்றும் ஒரு கொள்ளை கூட்டத்தின் தலைவனான சவுகத் அலி ஆகிய நான்கு பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். குறிப்பாக நேற்று சவுகத் அலியை பெரியமேடு போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.
வருகின்ற 13 ஆம் தேதி வரை அவனுக்கு போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது..
இந்த நிலையில் நேற்று மாலை புதுச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனுக்கும், சவுகத் அலிக்கும் தொடர்புள்ளதா என்பதை விசாரிப்பதற்காக புதுச்சேரி கிருமாம்பாக்கம் உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான 4 போலீசார் சென்னை பெரியமேடு காவல் நிலையத்திற்கு வந்தனர்.
காவலில் எடுக்கப்பட்டுள்ள சவுகத் அலியின் விவரங்கள் குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் சேகரித்தனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் புகைப்படத்தை சவுகத் அலியிடம் காண்பித்த போது இவர் யார் என தெரியாது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சவுகத் அலியிடம் சுமார் 2 மணி நேரமாக விசாரணை நடத்திவிட்டு போலீசார் சென்றனர். சவுகத் அலியின் கூட்டாளி இல்லை என்பதால் புதுச்சேரி போலீசார் ஹரியானாவிற்கு விரைந்து அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக புதுச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியிடம் பெரியமேடு போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்பிஐ வங்கி டெபாசிட் ஏடிஎம்களில் ஓகேஐ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்த இயந்திரத்தின் தொழில்நுட்பத்தை பற்றி கொள்ளை கும்பலுக்கு சொன்னது யார்? இது போன்ற நூதன முறையில் கொள்ளையடிப்பதை கற்று கொடுத்தது யார்? என்பது தொடர்பாக சவுகத் அலியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பா? ஓகேஐ நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கோ அல்லது அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு தொடர்பா என்ற கோணத்திலும் காவல்துறை துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சென்னையில் முதல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது சவுகத் அலியும் அவனுடன் வந்த கூட்டாளி என்பதும் விமானம் மூலமாக சென்னை வந்து பெரியமேடு ஏடிஎம் இயந்திரத்தில் கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது.
15 மற்றும் 16 ஆம் தேதி ஆகிய தினங்களில் சவுகத் அலியும், 17, 18 ஆம் தேதி வேறு நபர்கள் என 16 இலட்சம் வரை கொள்ளை அடித்ததும் தெரியவந்துள்ளது.
சென்னையில் கைவரிசை காட்டியவுடன் மற்றவர்களுக்கும் தகவல் கொடுத்து சென்னை வரக்கூறி கூகுள் மூலமாக எங்கெங்கு டெபாசிட் மெசின்கள் உள்ளது என்பதை ஆய்வு செய்து அதுப்படி சென்னை ஏரியா பிரித்து கொள்ளை அடித்துள்ளதும் தெரியவந்துள்ளது..
சென்னை சென்டரல் அருகே அறை எடுத்து தங்கி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது..
இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது..
இரவு நேரத்திலே இவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது..
இந்தி மொழி பெயர்பாளரை கொண்டு காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது. ஹரியானக்கு அழைத்து சென்று விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தங்கியிருந்த இடம் கொள்ளை நடந்த இடத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்..
Discussion about this post