நீலகிரி அருகே தெரியாமல் சுவைக்க நேர்ந்த மதுவின் டேஸ்ட், நாவில் ஒட்டிக் கொண்டதால் தினம் தினம் டாஸ்மாக்கை நோக்கி படையெடுத்து ஒயின் பாட்டிலை காலி செய்து கொண்டிருக்கின்றன சில குடிகார எலிகள். மதுக்கடை ஊழியர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள மான்ஸ்டர்ஸ் யார் ? பார்க்கலாம்.
பிரட்டை கொரித்து காலி செய்வது, வயரை குதறி வைப்பது, ஷோஃபாவை பஞ்சு பஞ்சாக்குவது என ஆடியன்ஸே ஆவேசம் கொள்ளும் அளவிற்கு மான்ஸ்டர் திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யாவை, பாடாய் படுத்தி எடுக்கும் ஒரு குட்டி எலி. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையில் இம்சை கொடுத்து அந்த வீட்டையும் அவரையும் அல்லோல செய்யும்.
எஸ்ஜே சூர்யவிற்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே எலியுடன் இப்படி ஒரு அனுபவம் இருந்திருக்கும். ஆனால் எவ்வளவு தொல்லைகள் செய்தாலும், அதனை பிடிப்பது என்பதும், அதன் திருவிளையாடலை தடுப்பது என்பதும் அவ்வளவு சுலபமானது அல்ல. எலிகள் உருவில் சிறியதாக இருக்கலாம். அதன் புத்தி கூர்மை நமக்கு பிடிபடாதது. அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் தான் காலம்புல்லா பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவம்.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட ஊரடங்கு நேரத்தில் காலம்புல்லா பகுதியியில் இயங்கி வரும் மதுக்கடைக்குள் புகுந்த எலிப் படை ஒன்று, அங்கிருந்த ஒயின் பாட்டில் மூடிகளை பற்களால் துளையிட்டு அதில் இருந்த ஒயினை சுவைத்துள்ளது. அந்த சுவை நாவில் நடனமாட தொடங்க, போதை, மூளைக்குள் சிலிர்ப்பை உண்டாக்க ஒயினுக்கு அடிமையான அந்த எலிக் கூட்டம், தினம் தினம் பூட்டிய கடைக்குள் புகுந்து நுழைந்து பார்ட்டி கொண்டாடி வருகின்றன.
கடைகளில் ஏராளமான மது வகைகள் இருந்தாலும் முதலில் அருந்திய பச்சை நிற ஒயின் பாட்டில்களை மட்டும் தேடிப் பிடித்து காலி செய்யும் குடிகார எலிகள், இதுவரை 10 மேற்பட்ட பாட்டில்களை குடித்து தீர்த்துள்ளதாக குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள். எந்த வழியாக வருகிறது. எப்படி ஒயின் பாட்டில்களை அடையாளம் காண்கிறது என ஒன்றும் புரியாமல், எலி குடித்து விட்டு போன காலி பாட்டில்களை அடுக்கி வைத்து கொண்டு, எஸ் ஜே சூர்யா போல மண்டையை உடைத்து கொண்டிருக்கிறார்கள் மதுக்கடை ஊழியர்கள்.
Discussion about this post