அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய தணிக்கை குழு தெரிவித்த கருத்துகளை ஊடகங்கள் மிகைப்படுத்தி காட்டுவதாக முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேவை துறையாக செயல்பட்டு வரும் மின் துறை லாபம் ஈட்டும் துறையல்ல என தெரிவித்தார். கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதே அதிமுகவின் முக்கிய குறிக்கோளாக இருந்ததாக கூறிய அவர், இதனால் நஷ்டம் ஏற்பட்டதே தவிர, ஊழல் என்று கூறுவதில் உண்மையில்லை என விளக்கம் அளித்தார்.
திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும், நீண்ட கால ஒப்பந்தம் எனக் குறிப்பிட்ட அவர், அதன் காரணமாகவே நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார்.
தமிழகத்தில் மட்டும் தான் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரமும், விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரமும் இலவசமாக வழங்கப்பட்டதாக கூறிய அவர், 2006ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த திமுக அதிக விலை கொடுத்து மின்சாரம், நிலக்கரி ஆகியவற்றை வாங்கியதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தணிக்கை துறை தெரிவித்திருப்பதை மேற்கோள் காட்டினார்.
நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் போது துறைமுகங்களில் அதன் தரம் பரிசோதிக்கப்பட்டு பின்னரே கொள்முதல் செய்யப்பட்டது என்றும், தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார். நிலக்கரியை அனல்மின் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு ரயில் சேவையே பயன்படுத்தப்பட்டதாகவும், இதை பயனற்ற சரக்குக் கட்டணமாக ஏற்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை விட்டுச் செல்லும் போது மின்வாரியத்தின் கடன் தொகை 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாக கூறிய அவர், 2011ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த போது 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாக தெரிவித்தார்.
வெறும் யூகத்தின் அடிப்படையில், தணிக்கை குழு வெளியிட்டுள்ள தகவலை, மிகைப்படுத்தி சிலர் தவறாக கூறி வருவதாகவும், அவற்றில் எந்த வித உண்மையில்லை என்றும் முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார்.
Discussion about this post