சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் இந்த ஆண்டு தமிழ் நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா?நடைபெறாதா? எனபதை தெளிவு படுத்தினால் தான் மாணவர்கள் அதற்கேற்றார் போல் தங்களை தயார் படுத்திக்கொள்ள முடியும் என அரசு விரைவில் பதிலளிக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தமிழ் நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா?
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக்
கனவை நிறைவேற்ற நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அனைவரது நிலைபாடு. காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணி ஆட்சியின் போது, 2010-ம் ஆண்டு, கொண்டுவரப்பட்ட நாடு முழுவதும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு தமிழ் நாட்டு மாணவர்களைப் பொறுத்தவரை பாதிப்பை ஏற்படுத்தும்; அதை திணிக்கக் கூடாது என்பது தான் மாண்புமிகு அம்மா அரசின் நிலைபாடு.
இதற்காக, மாண்புமிகு அம்மா அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியது; விலக்கும் பெற்றது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.
நீட் தேர்வை அம்மாவின் அரசு கடுமையாக எதிர்த்த போதும், அது இருக்கும் வரை,
தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை அத்தேர்வுக்கு தயார்படுத்தும்
பணியையும், அதற்கு ஏற்றார் போன்ற பாடத் திட்டங்களை மாற்றி அமைத்ததோடு,
மாவட்டந்தோறும் நீட் தேர்வுக்காக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சியும்
அளிக்கப்பட்டது. மேலும், நீட் தேர்வு குறித்த புரிதலுக்காக வல்லுநர்களைக் கொண்டு
ஒரு சிறப்பு கையேடும் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்வித நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு
மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அரசால் 7.5 சதவீத இடஒதுக்கீடும் கொண்டுவரப்பட்டது. இதனால், சுமார் 435 மாணவ, மாணவியர் மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்களது 5 ஆண்டுக்கான மருத்துவக் கல்விச் செலவினை அம்மாவின் அரசே ஏற்றுக்கொண்டது.
நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் நான் பேசும்பொழுது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தீர்களே,
என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, மாண்புமிகு நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில், நீட்டின் பின் விளைவுகளை அறிவதற்கு கமிஷன்
அமைக்கப்பட்டுள்ளது என்றும், கமிஷனின் பரிந்துரைகளின் மீது மேல்நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதில் அளித்தார். அதைத்
தொடர்ந்து, நான் பேரவையில் நேரடியாக, இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா ? இல்லையா?
என்ற கேள்வியை எழுப்பினேன். நீட் இருப்பின் மாணவர்கள் இதற்கு தயார் ஆக
வேண்டுமா ? வேண்டாமா? என்றும் கேட்டபொழுது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
இதற்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை.
தற்போதைய அரசின் இந்த முடிவால், நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில்
நடைபெறுமா ? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள்
மத்தியிலும் எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயராக வேண்டுமா ? வேண்டாமா?என்று புரியாமல் தவித்து வருகிறார்கள்.
தமிழ் நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்துள்ள மாண்புமிகு நீதியரசர்
திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு,
தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா ? வேண்டாமா ? என்பதை விரைவாக தெளிவுபடுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்..
Discussion about this post