தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா அச்சுறுத்தலால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோயில்களும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்காததற்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா தினசரி பாதிப்பு 6 ஆயிரமாக இருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்து பணம் பார்க்கும் திமுக அரசு, கோயில்களை திறக்க தயக்கம் காட்டுவது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கோயில்களை திறக்க வலியுறுத்தி விழுப்புரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு, இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல், கோயில்களை திறக்க வலியுறுத்தி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இந்து முன்னணியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்கிய அரசு கோயில்களை திறந்து பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்காதது ஏன்? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதேபோல், திருநெல்வேலி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட பல இடங்களில் கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Discussion about this post