ஐந்து மாதங்களுக்கு பிறகு சென்னையில் முழு அளவில் இயக்கப்பட்ட புறநகர் ரயில்களில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்சேவையை இன்று முதல் பயன்படுத்த அனைத்து பயணிகளுக்கும் கட்டுபாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண் பயணிகள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள், அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை என எல்லா நேரமும், புறநகர் சேவையை பயன்படுத்தலாம் என்றும் ஆண் பயணிகள், கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டுமே ரயில்களில் பயணிக்க முடியும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு இதுவரை 478 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் 630 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள நான்கு வழித்தடங்களிலும் வழக்கமான அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் முககவசம் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post