கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன், செப்டம்பர் 10 ஆம் தேதி முதல், விற்பனைக்கு வர உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் இணைந்து, குறைந்த விலையிலான ஸ்மார்ட் போனை உருவாக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம், மும்பையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, புதிய ஸ்மார்ட் போன், விநாயகர் சதுர்த்தி தினமான வரும் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவித்தார். இந்த ஸ்மார்ட் போனின் விலை இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என கூறிய அவர், இது கண்டிப்பாக இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் மிகக்குறைந்த விலையிலான ஸ்மார்ட் போனாக இருக்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதே போன்று, கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையும், ரிலையன்ஸுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ஜியோ நெக்ஸ்ட் போன் குறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், 5ஜி சேவையை இந்தியாவில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்து வருவதாக, இரண்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
Discussion about this post