சென்னையில் நூதன முறையில் ஏடிஎம்களில் லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்மில், மேலாளர் முரளிபாபு தலைமையில் கணக்கு சரிபார்க்கப்பட்டபோது ஒன்றரை லட்சம் ரூபாய் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணம் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
கடந்த 17ம் தேதி மாலை ஏடிஎம் மையத்திற்கு வந்த இரு மர்ம நபர்கள், பத்தாயிரம் ரூபாய் வீதம்,15 முறை பணம் எடுத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ஷட்டரை பிடித்துக்கொண்டு நூதன முறையில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
அவ்வாறு 20 நொடிகளுக்கு மேல் ஷட்டரை பிடித்துக்கொண்டால், வெளியே எடுக்கப்பட்ட பணம் மீண்டும் உள்ளே சென்றது போலவும், வாடிக்கையாளர் கணக்கிற்கு திரும்ப சென்றது போலவும் கணக்கு காட்டும்.
இந்த வித்தையை பயன்படுத்தி, விருகம்பாக்கம், வேளச்சேரி விஜயநகர், தரமணி எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்களில் கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, 15 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Discussion about this post