விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வெடி விபத்தில், மூவர் உயிரிழந்தனர்.
தாயில்பட்டி காலனியைச் சேர்ந்த 25 வயதான சூர்யா என்பவர், தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் போது, வெடிவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தூர், வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில், அவரது வீடு உள்பட ஐந்து வீடுகள் தரைமட்டமானது.
வெடி விபத்தில் சிக்கி, 5 வயது சிறுவன் ரஃபியா சல்மான், செல்வமணி, கற்பகம் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சூர்யா, சோலையம்மாள் ஆகியோர், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் , கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, எல்லப்பன்பேட்டை கிராமத்தில், செந்தில் என்பவர் நாட்டு பட்டாசுகளை அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்வதற்காக வீட்டில் வைத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து கருகின.
இந்த விபத்தில், செந்தில் சிறு காயங்களுடன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Discussion about this post