ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரையின் போது வழக்கமாக அரசின் முன்னோடி திட்டங்கள் இடம்பெறும் என்றும், ஆனால் இந்த முறை ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார்.
திமுக ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது அதற்கு மாறாக கமிட்டி அமைத்து, நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமென கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ஆட்சிக்கு வந்து 44 நாட்கள் கடந்த பிறகும், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை ரத்து செய்தற்கான ரசீது வழங்கப்படாதது ஏன்? என்பது எடப்பாடி பழனிசாமியின் கேள்வி.
குடும்பத் தலைவிக்கு ஊக்க தொகை, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் போன்ற எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லாததையும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
கொரோனா நோய் தடுப்பு பணிகளில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.
கூட்டத் தொடருக்குப் பிறகு, பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டியில், கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக சாடினார்.
Discussion about this post