தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஜீன் 18ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நேரில் ஆஜராகுமாறு ட்விட்டருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
குடிமக்களின் பாதுகாப்பு உரிமைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் செய்தி ஊடகதளங்களை தவறாக பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்தும், டிஜிட்டல் தளத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்துவது குறித்தும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தனியுரிமை சட்டங்கள் மற்றும் தனிப்பட்ட நபரின் தரவு பாதுகாப்பு குறித்து பேசுவதற்காக கடந்த ஜனவரி மாதமே தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ட்விட்டருக்கு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ட்விட்டர் இணங்க மறுத்த நிலையில் தற்போதைய ட்விட்டர் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த சம்மன் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்தியாவின் இந்த புதிய விதிகளுக்கு மற்ற சமூக ஊடகங்கள் இணங்க சம்மதம் தெரிவித்த நிலையில் ட்விட்டர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து திருத்தங்களை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தது. இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு ஜூன் 9ம் தேதி இந்தியாவின் புதிய விதிகளுக்கு இணங்க அனைத்து முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், கொரோனா சூழல் காரணமாக தங்களுக்கு சில நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது.
புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள், நிர்வாணம், ஆபாசம், புகைப்படங்களை தவறாக பதிவேற்றுவது, மார்பிங் செய்வது, உள்ளிட்ட கருத்துகள் குறித்து அரசாங்கமே நேரடியாக தலையிட்டு அவற்றை நிரந்தரமாக முடக்க இந்த புதிய விதிகள் வழிவகை செய்கின்றன.
Discussion about this post