தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.
இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.
இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய “மச்சானைப் பாத்தீங்களா..” என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.
நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படுகின்றார்.
இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
Discussion about this post