”ஃபுட் சேலேஜ் புகழ்” சாப்பாட்டு ராமன், காவல் துறையிடம் சிக்கி களி சேலஜ் எடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார். திண்ணு கெட்ட ஈமு கோழியின் வாழ்வில் கண்ணு பட்டது எப்படி..பார்க்கலாம்
முழு ஆட்டிற்கு முக்தி அளித்து கொண்டிருக்கும் இந்த மகானின் பெயர் பொற்செழியன். கள்ளக் குறிச்சி வாழ் கரும்பு இயந்திரம். விழுவதை எல்லாம் விழுங்கி செரிக்கும் பெர்முடாஸ் முக்கோண வயிறுதான் இவரின் ஒரே மூலதனம். கைதி கார்த்திக்கே ஜெர்க் கொடுக்கும் அளவிற்கு பல வாளிகளை உள்ளே தள்ளும் இந்த பெரும் பள்ளதாக்கை 10 லட்சம் பேர் யூ டியூபில் பரவசத்துடன் ஃபாலோ செய்கிறார்கள்.
படித்த சித்த மருத்துவம் சொகுசு வாழ்க்கைக்கு வித்திடாத நிலையில் கோழிப் பண்ணையை குக்கரில் போட்டு காலி செய்வது, ஆட்டு குட்டியை அப்படியே வேக வைத்து உண்பது, பிரியாணி அண்டாவை பிரித்து மேய்வது என சாப்பாட்டில் சாகசம் செய்து சர்க்கஸ் காட்டி கொண்டிருக்கிறது இந்த மனித மலைப்பாம்பு.
கொரோனா கண்ணுக்கு தெரிந்தால் அதையும் உண்டு வருமானம் ஈட்டும் முடிவில் இருந்த நம் கோக்கு மாக்கு கும்பகர்ணன், அது முடியாமல் போகவே கொரோனாவுக்கு மருத்துவம் செய்வதாக கூறி வெள்ளை கோட், ஸ்டெதஸ்கோப் சகிதம் அல்லோபதி டாக்டர் அவதாரம் எடுத்து கூட்டம் சேர்க்க தொடங்கியுள்ளார்.
”சின்ன சேலம்” சீனாதானா தொடங்கிய குபீர் கொரோனா கிளினிக், குறுகிய நாட்களிலேயே சுத்துப்பட்டி கிராமத்திலும் கொடி கட்டி பறக்க தொடங்கியது. சோகம் என்னவெனில் அந்த கொடி சுகாதார துறையின் கண்ணிலும் பட்டது தான். கிளைமேக்ஸாக வேலி தோட்ட வீட்டிற்குள் அதிரடியாய் புகுந்த போலீசார், போலி மருத்துவம் செய்து கொண்டிருந்த ஜெலுசில் பாட்டிலை ஊசியும் கையுமாக பிடித்து வேனில் அள்ளிப்போட்டு விருந்துக்கு அழைத்து சென்றனர்.
புட் சேலஜ் புகழ் சாப்பாட்டு ராமனை காவல்துறையினர் அழைத்து சென்றது ரசிகர்களுக்கு என்ன மன நிலையை ஏற்படுத்தி இருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் தோட்டத்தில் அடைபட்டு கிடந்த அந்த ஆட்டிற்கும் கோழிக்கும் அன்றைய நாள் நிச்சயம் தீபாவளிதான்.
Discussion about this post