மனிதக் குரலால் எட்டமுடியாத தூரத்தில் இருக்கும் மனிதனுடன் ஒரு கம்பி மூலம் பேச முடியும் என்று அறிவியல் உலகம் நிரூபித்தது. யாராலும் நம்ப முடியாதபோதும் ஆச்சரியத்துடன் சேர்ந்த அவசியம் இதனை பட்டி தொட்டிகளுக்கும் பரப்பும் வேலயை எடுத்துக்கொண்டது. உலகெங்கும் போன்கள் பரவத்தொடங்கிப. டெலிபோன் இருக்கும் வீடுகள் அவற்றை கௌரவச்சின்னமாகப் பாவித்ததும் உண்டு. இப்படித் தொடங்கியது
மாறிக்கொண்டே இருப்பதுதானே பரிணாம வளர்ச்சி! டெலிபோன்கள் மெல்ல மெல்ல அளவில் குறுகி செல்போன்களாகின. கம்பி வழியாக போன குரல் இனி காற்று வழியாக பயணப்பட்டது. சட்டைப்பைக்குள் இருக்கும் செல்போன்கள் மூலம் மனிதன் எங்கு நின்றபடியும் எவர் குரலையும் கேட்கலாம் என்ற அடுத்த ஆச்சரியத்தை அறிவியல் இப்போது அறிமுகம் செய்து வைத்தது. இதன் விளைவாக, குரல்கேட்பின் பரிணாம வளர்ச்சி பயணித்தலோடு சேர்ந்தது.
பயணித்தபடி குரல்கேட்டல் என்பதோடு நில்லாமல் படமெடுக்கும் வசதியும் சேர்ந்துகொண்டதுதான் செல்போன் ஒரு கொண்டாட்டப்பொருளாக மாறியதற்கு அடிப்படை. நடந்தபடி பேசிக்கொண்டே போனவர், போன இடத்தில் போட்டோ வேறு எடுத்து வருவாராம் என்று, ஆச்சரியத்தின் அடுத்த கட்டத்தை அறிமுகம் செய்தன செல்போன்கள்.
ஒரே சமயத்தில் கணிணிகளும் செல்போன்களும் அத்தியாவசியப் பொருள் பட்டியலுக்கு வந்த சமயம் அது. இன்னும் கொஞ்ச காலத்தில் மிக்ஸி கிரைண்டர் எல்லாம் கூட செல்போனில் வரும் என்று சொலவடை சொன்னார்கள் பெரியவர்கள். காலப்போக்கில் அதுவும் சாத்தியமானது.
ஆனால், படமெடுக்கும் கேமரா, குரல் கேட்கும் செல்போன் என இரண்டு கருவிகளின் ஒரு வடிவம் என்றிருந்த செல்போன்கள், பேசுபவரைப் படமெடுத்தபடியே குரல்கேட்க வைக்கும் குரளிவித்தைக்கு அடுத்த அச்சாரம் போட்டது. அதில் வெற்றியும் கண்டது.
இதற்குப் பின்னர், வீடியோ கால்கள் எனும் விசித்திர உண்மை விஸ்வரூமெடுத்தது. அரசுக் கூட்டங்கள் சிலவும், பல்கலைக்கழக நிகழ்வுகள் பலவும் வீடியோ கான்ஃபெரென்சிங் வழி வித்தை காட்டின. மெல்ல மெல்ல பேஸ்புக்கின் தாத்தா ஆர்க்குட், வாட்சப்பின் தந்தை ஹேங் அவுட்ஸ் ஆகியவை வீடியோ கால் வசதி இல்லாததால் விலக்கி வைக்கப்பட்டன. இணைய வசதியிலும் 3ஜி, 4ஜி என காட்சிகள் மாறி காலம் நிறைய, முகம் பார்க்கா காதல்கோட்டைகள் முடாள் தனத்துக்கு முகவரி ஆக்கப்பட்டன.
இப்படியான வரிசையில் நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம், வீடியோ வசதியால் வெற்றிநடை போடும் சமூக வலைதளங்கள். இன்னும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸும், யூட்டுபின் ஷார்ட்ஸும் என வீடியோவின் அடுத்த பரிணாமமும் வெகுவிரைவில் வெற்றிகோப்பை எடுக்கும். இதற்கிடையில், அர்த்தசாமத்து அரட்டைகளுக்கு அதிகாரப்பூவ மையமாகியிருக்கிறது ட்விட்டரின் ஸ்பேசஸ் வசதி.
“தெரிந்தவர்களோடு பேசலாம், தெரியாத பிரபலங்களைப் பார்க்கலாம். பின்தொடராலாம்” என்றிருந்த சமூக வலைதள அனுபத்தை , பிரபலங்களோடு அமர்ந்து வட்டம்போட்டு அரட்டை அடிக்கும் வாய்ப்புக்களமாக மாற்றியிருக்கிறது ஸ்பேசஸ். ஏ.ஆர்.ரகுமான் இன்றிரவு பேசிக்கொண்டிருப்பார் போய் அட்டியில் அமர்ந்து கொள்ளுங்கள். யார் கண்டது? உங்கள் விருப்பத்துக்குரியவர் இந்த நேரம் ஸ்பேஸுக்குள் வந்து பேசத் தொடங்கியிருக்கலாம்.
Discussion about this post